உள்ளூர் செய்திகள்

நிழலில்லா வானியல் நிகழ்வு: மாணவர்கள் பார்வையிட்டனர்

தினமும் காலையிலும், மாலையிலும் பொருள்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்குச் செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும். ஆனால், அனைவரும் நினைப்பதைப் போல சூரியன் தினமும் நண்பகல் 12 மணிக்கு வானில் நேர் உச்சிக்கு வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சிக்கு வரும். ஆக ஒரு இடத்தில் உள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழலில்லா நாள் என்கிறோம்.
இந்த வானியல்  நிகழ்வு ஆண்டுக்கு 2 நாள்கள் மட்டுமே நிகழும்.  நிகழாண்டு ஏப்ரல் 21, ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் நிழலில்லா நாள் இருக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்தனர். இதையொட்டி நிழலில்லா நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) அமைந்தது.
இந்த நிழலில்லா நாள் குறித்த வானியல் நிகழ்வை பொதுமக்கள் கண்டு கழிக்கும் வகையில், உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகம், லாஸ்பேட்டை கோளரங்கம் ஆகிய  இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் மதிவாணன் பங்கேற்று, அரிய அறிவியல் நிகழ்வு பற்றி விளக்கமளித்தார். ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, நிழலில்லா வானியல் நிகழ்வைக் கண்டு மகிழ்ந்தனர். Read More

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker